தர்மசாலா :ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் படைத்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிர்க்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் சுப்மான் கில் 26 ரன்கள் எடுத்தார். முன்னதாக சுப்மான் கில் 12 ரன்களை எட்டிய போது வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்து முதல் வீரர் என்ற சிறப்புக்கு சுப்மான் கில் சொந்தக்காரர் ஆனார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா இந்த சாதனையை தன் வசம் வைத்து இருந்தார். அவர் கடந்த 2011ஆம் ஆண்டு 40 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தார். ஆனால், சுப்மான் கில் 39 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்து உள்ளார்.
கடந்த நான்கு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வரும் சுப்மான் கில், அதில் மூன்று ஆட்டங்களில் அரை சதம் கடந்தார். அதேநேரம் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரை தொடர்ந்து மிக இளம் வயதில் 2 ஆயிரன் ரன்களை கடந்த வீரர் என்ற சிறப்பையும் சுப்மான் கில் பெற்று உள்ளார். அண்மையில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட சுப்மான் கில், அதில் இருந்து மீண்டு அணியில் இணைந்து தொடர்ந்து ஜொலித்து வருகிறார்.
இதையும் படிங்க :பழைய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை பார்க்க ஆசையா? லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் அட்டவணை வெளியீடு!