பெங்களூரு :உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 20ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. போட்டியை முன்னிட்டு பெங்களூரு சின்னசாமி மைதானம் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்தேசம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் வரும் 20ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்ன்சாமி மைதானத்தில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டம் என்பதால் மிகுந்த கவனம் பெற்று உள்ளது.
போட்டிக்கு முன்னதாக பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டு உள்ளது. பெங்களூருவில் நடைபெறும் முதல் ஆட்டம் என்பதால் ஏறத்தாழ அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், சில அமைப்புகள் இந்த ஆட்டத்தின் பிரபலத்தை பயன்படுத்தி சர்வதேச அளவிலான செயல்களில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.