ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னர், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான டி20 போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டி20 தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், அறிமுக வீரர்கள் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பராக விளங்கும் விருத்திமான் சாஹா டி20 தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தேர்வருமான திலீப் வெங்சர்கார் கூறுகையில், "சாஹா சிறப்பான விக்கெட் கீப்பர். சாஹாவின் வயது 37, தினேஷ் கார்த்திக்கின் வயது 36. வயதை அடிப்படையாக கொண்டு வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என்றால், கிட்டத்தட்ட ஒரே வயதைக் கொண்ட சாஹா, தினேஷ் கார்த்திக் இருவருமே தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது இருவருமே தேர்வு செய்யாமல் விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிரிக்கெட்டில் பல சந்தர்ப்பங்களில் எந்த விஷயங்களும் நிலையாக இருப்பதில்லை. லாஜிக்கே இல்லாமல் வீரர்களை தேர்வு செய்கிறார்கள்.
ஆம், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விருத்திமான் சாஹாவும், தற்போது சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்கும் சமமான திறமை கொண்டவர்கள். இருவரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் இருவரது ஆட்டத்திலும், செயல்திறனிலும் ஒற்றுமைகள் உள்ளன.