அகமதாபாத் :ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் 12வது லீக் ஆட்டமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷபீக் களம் இறங்கினர். 7 ஓவர்கள் வரை நல்ல தொடக்கத்தை தந்த பாகிஸ்தான் ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உடைத்தார். முகமது சிராஜ் பந்துவீச்சில், அப்துல்லா ஷபீக் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின் இமாம் உல் ஹக்கும் ஆட்டமிழக்க, ரிஸ்வான் - பாபர் அசாம் கூட்டணி கைகோர்த்தது. இந்த கூட்டணி சிறுது நேரம் தாக்கு பிடித்து அணிக்கு ரன்களை சேர்த்தது. நிதானமான ஆட்டத்தை கையாண்ட பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்த நிலையில், சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்கள் முடிவில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பண்டியா, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கியது இந்திய அணி. ஆட்டத்தை ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடங்கினர். தொடக்கம் முதலே பவுண்டரிகளை குவித்த இந்த கூட்டணி 23 ரன்கள் எடுத்த நிலையில், பிரிந்தது. சுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த விராட் கோலியும் 16 ரன்களில் வெளியேற மறுமுனையில் இருந்த ரோஹித் சர்மா அதிரடி காட்டினார். தொடர்ந்து அரை சதம் கடந்த ரோகித் சர்மா ஒரு கட்டத்தில் சதம் நோக்கி சென்றார். இருப்பினும் ரோஹித் 86 ரன்கள் எடுத்த நிலையில், ஷஹீன் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. 30 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 192 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அப்ரிடி 2 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஐசிசி அணிகள் தரவரிசையில் முதலிடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.
மேலும் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றது கிடையாது என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. 1992 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இதுவரை 8 ஆட்டங்கள் நடைபெற்று உள்ள நிலையில், அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளது.
இதையும் படிங்க :India Vs Pakistan : முழு தயாரிப்பில் நரேந்திர மோடி மைதானம்! என்னென்ன வசதிகள் இருக்கு?