ஹைதராபாத்: 16வது ஆசிய உலகக் கோப்பை இன்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தான் முல்தான் நகரில் தொடங்குகிறது. முதல் ஆட்டமாக உலக ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள நேபாள் அணி, முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த ஆசிய ஒருநாள் கோப்பை முக்கியத்துவம் பெறுகிறது.
இன்றைய ஆட்டத்தில் பெரிதாக எவ்வித திருப்பமும் இல்லை என்றால், பாகிஸ்தான் அணி நேபாள் அணியை எளிதில் வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கும். நேபாள் அணிக்கு எதிரான இந்த போட்டிக்கு பிறகு உலகமே எதிர்பார்த்து இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணி மோதும் போட்டி நடக்கிறது. இந்த போட்டி வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:Asia Cup 2023: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதல்!
ரோகித் சர்மா சாதனைகள்: ஆசிய கோப்பையில் இதுவரை 5 போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றிய ரோகித் சர்மா, ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவியது இல்லை. ஆசிய கோப்பையில் விளையாடிய 22 போட்டிகளில் 745 ரன்களை அவர் குவித்துள்ளார். அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் ஆசிய கோப்பையில் 971 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சாதனையை முறியடிக்க இன்னும் 227 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கின்றது.
அதேபோல், ரோகித் சர்மா இதுவரை விளையாடிய 244 ஒரு நாள் போட்டிகளில், 30 சதங்களை விளாசியுள்ளார். மேலும், ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில், முன்னாள் ஆஸ்திரேலியா வீரரான ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குtஹ் தள்ளி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைப்பார். அதே நேரத்தில், இன்னும் 163 ரன்களை அடித்தால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் தன்வசம் பெறுவார்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் முதல் 5 இடத்தில் உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 244 போட்டிகளில் 9,837 ரன்கள் எடுத்து, உலக அளவில் 15வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வெல்வார்...பயிற்சியாளர் காசிநாத் நாயக்!