லண்டன்:இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 1 டெஸ்ட், 3 டி20, 2 ஒருநாள் போட்டிகள் என்ற மூன்று தொடர்களையும் விளையாட இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
தற்போது, டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், டி20 போட்டி ஜூலை 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, அவரால் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதனால், அவர் அடுத்து வரும் டி20 தொடரில் இருந்து அணியில் இணைந்து விடுவார் எனக் கூறப்பட்டது.
டி20, ஒருநாள் போட்டிக்கான அணியை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில், டி20, ஒருநாள் தொடர்களுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், டி20 தொடரில் விளையாடும் வீரர்கள், நார்தாம்ப்டன்ஷைர் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர்.
நார்தாம்ப்டனில் பயிற்சி: இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மாவுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று நேற்று (ஜூலை 3) கண்டறியப்பட்டது. இந்நிலையில், நார்தாம்ப்டன் கவுண்டி மைதானத்தில் ரோஹித் சர்மா வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். சமீப காலமாக பெரிய அளவில் ஃபார்மில் இல்லாத ரோஹித், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு ஏற்றவாறு தயாராகி வருகிறார்.