ஐதராபாத் :2024ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அண்மையில் ஐபிஎல் அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் டிரேட் முறையில் அணிகளுக்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மும்பை இந்தியனஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வெளியிட்டு இருந்தது. ரோகித் சர்மாவிடம் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியை புறக்கணிக்கும் வகையில் அந்த அணியின் சமூக வலைதள பக்கங்களை ரசிகர்களை அன்-பாலோவ் செய்து வருகின்றனர். இதனால் கடந்த இரண்டு நாட்களில் சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி கடும் பேசு பொருளாகி உள்ளது. இந்நிலையில், ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுப்பிரமணியன் பத்ரிநாத், தனது எக்ஸ் பக்கத்தில் சென்னை அணியின் ஜெர்சியில் ரோகித் சர்மா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். மேலும் அவர், "டோனி தலைமையிலான சென்னை அணி 30 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய வீரர்களை கொண்டு இருப்பதால் 'Dad's Army' என்று அழைக்கப்படுகிறது.
மேலும் ரோகித் சர்மா இனி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இல்லாததால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறலாம் என்ற ஊகங்கள் உள்ளன" என்று பதிவுட்டு உள்ளார். மேலும் அவர் மற்றொரு பதிவில், ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவுகளை எடுக்கும் போது வேறுவிதமாக நினைப்பதில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்காலத்தை நோக்கி காய்களை நகர்த்துவதில் தயங்குவதில்லை. மேலும் ஒரு உரிமையாளராக கடினமான முடிவுகளை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாக்ம் வெட்கப்பட்டதில்லை. அதேநேரம் எதிர்கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம்.
ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். 2013ஆம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடி 5 முறை சாம்பியன் பட்டம் வென்று தந்து உள்ளார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டே ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்கும் முடிவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எடுத்து இருக்கலாம்" என்று பத்ரிநாத் தனது பதிவில் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வரும் ரோகித் சர்மா, தனது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று தந்து உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2013ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது அந்தாண்டுக்கான ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்று தந்தவர் ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 2015, 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்படி கடந்த 13 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஸ்தான கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மா இந்த முறை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது, அவரது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 163 போட்டிகளில் 91 போட்டிளுக்கு ரோகித் சர்மா வெற்றியை தேடித் தந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா! ரோகித் சர்மா நிலை என்னாச்சு? பின்னணி என்ன?