ஹைதராபாத்:இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மெனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்(Rishabh Pant) கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் டேராடூன் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விபத்தில் ரிஷப் பண்ட் காலில் தசை நார் கிழிந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் இயல்பு நிலைக்கு திரும்பி கிரிக்கெட் விளையாட குறைந்தது ஒராண்டு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, ரிஷப் பண்ட் சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதை உணர்த்தும் வகையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் நடைபயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட பண்ட் தனது காயத்திலிருந்து சிறிது முன்னேற்றம் அடைந்ததால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அணியான டெல்லி கேப்பிடல்ஸ்க்கு விளையாட முடியாவிட்டாலும் மைதானத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்கிங் ஸ்டிக்கை தூக்கிப் போட்டு நடப்பது போன்ற காட்சியும் "இனி ஊன்றுகோல் தேவைப்படாது" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து ரிஷப் பண்ட் விரைவில் குணமாகி கிரிக்கெட் விளையாட வேண்டும் என சக வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:IPL Rivalry week: இந்த வாரம்.. அனல் பறக்கும் வாரம்! வரிந்துக் கட்டும் அணிகள்!