அகமதாபாத் :நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆல் ரவுண்டர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருக்கும் என்றும் இந்திய அணியை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு அளப்பரிய வகையில் இருக்கும் என்றும் அவரது சிறு வயது பயிற்சியாளர் மகேந்திர சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் விளையாடுகின்றன.
இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு முதலில் லீக் ஆட்டங்களும், அதில் வெற்றி பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட, அணிகள் இந்தியாவுக்கு வந்தடைந்தன. தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம் நடப்பு சீசனை வெல்லும் முனைப்பில் காத்திருக்கும் அணிகளுக்கு நிகராக வெற்றியை தீர்மானிக்கும் வீரர்கள் குறித்த யூகங்கள் பரவி வருகின்றன.
அந்த வகையில் நடப்பு உலக கோப்பை தொடரில் ஆல் ரவுண்டர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என்றும் இந்திய அணியை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு அளப்பரிய வகையில் இருக்கும் என அவரது சிறு வயது பயிற்சியாளர் மகேந்திர சிங் சவுகான் பந்தயம் கட்டும் அளவுக்கு உறுதியாக உள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் நிலவரம், நடப்பு சீசனில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு, தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் சிறு வயது பயிற்சியாளர் மகேந்திர சிங் சவுகான் ஈடிவி பாரத் செய்திகளிடம் பகிரிந்து கொண்டார்.
அவர் கூறுகையில், "ஸ்லாக் ஓவர்கள் எனப்படும் இக்கட்டான சுழலில் அதிரடியாக விளையாடி அணியின் ரன் கணக்கை கணிசமாக உயர்த்த வேண்டிய பணி ஆல் ரவுண்டர்களுக்கு உள்ளது. அந்த வகையில் இந்திய அணியை பொறுத்தவரை ஸ்லாக் ஓவர்களில் பலம் வாய்ந்து காணப்படுகிறது. ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்த்திக் பாண்ட்யா ஆகிய மூன்று ஆல் ரவுண்டர்கள் இந்திய அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
இந்தியாவை போல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிலும் ஆல் ரவுண்டர்கள் பலமாக காணப்படுகின்றனர். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்த்திக் பாண்ட்யா உள்ளிட்ட ஸ்லாக் ஓவர்களை சமாளித்து விளையாடக் கூடிய திறமையான வீரர்கள் உள்ளனர்.
திறமை மிகுந்த ஆல் ரவுண்டர்களை கொண்டு உள்ள இந்திய அணி உலக கோப்பை தொடரை வெல்ல அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளன. ஸ்லாக் ஓவர்களை சமாளித்து விளையாடும் ஆல் ரவுண்டரக்ள் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பலப்படுத்துகின்றனர். இந்தியா எனக்கு மிகவும் பிடித்த அணி, வரும் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற விரும்புகிறேன்.
ஆனால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்லும் போட்டியில் முனைப்புடன் உள்ளன. அதேநேரம் பாகிஸ்தானும் வலுவான அணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜடேஜா எட்டு வயதாக இருந்த போது, தனது பெற்றோருடன் கிரிக்கெட் கற்றுக் கொள்ள வந்தார்.
கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் அப்போதே தெளிவாக தெரிந்தது. ஆரம்பக் கட்டத்தில், வேகப்பந்து வீச்சாளராக விரும்பிய ரவீந்திர ஜடேஜா நாளடைவில் சுழற்பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சற்று உயரம் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அவர் சுழற்பந்து வீச்சை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதேநேரம் சுழற்பந்து வீச்சுக்கு ரவீந்திர ஜடேஜாவுக்கு பொருத்தமாக இருந்தது. அதே சுழற்பந்து வீச்சால் தற்போது உலகெங்கிலும் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை பொறுத்தவரை, ஆடுகளத்தில் அவரது வேகம் மற்றும் விரைவான செயல்பாடு மற்ற வீரர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
விரைவான பந்துவீச்சு காரணமாக அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக மாறிய ரவீந்திர ஜடேஜா பல முக்கிய போட்டிகளில் ஒற்றை ஆளாக களத்தில் நின்று அணிக்கு வெற்றிகளை தேடித் தந்து உள்ளார். ஸ்லாக் ஓவர்களில் அடித்து விளையாடியும், துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டும் தன் திறமைகளை பல்வேறு ஆட்டங்களில் ரவீந்திர ஜடேஜா வெளிப்படுத்தி உள்ளார்.
ஜடேஜாவின் ஆட்டத்தை டிவியில் பார்ப்பதில்லை. கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யும் போது அவர்கள் உதிர்க்கும் வார்த்தையில் இருந்து ஜடேஜாவின் ஆட்டத்தை பற்றி அறிந்து கொள்கிறேன். சில நேரங்களில் ஜடேஜாவின் ஆட்டத்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடையும் போதெல்லாம் எனக்கும் வருத்தமாக உள்ளது.
அடித்து ஆடக் கூடிய திறன் மற்றும் விரைவாக செயல்படக் கூடிய பங்களிப்பின் காரணமாக ரவீந்திர ஜடேஜா நடப்பு உலக கோப்பை சீசனின் நிச்சயம் ஜொலிப்பார். ஆட்டத்தை மெருக்கேற்றக் கூடிய எந்த அறிவுரைகளும் ஜடேஜாவுக்கு தேவையில்லை, அவரது ஆட்டம் நல்ல முறையில் உள்ளது.
ஜடேஜா உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இருவரு தொலைபேசியில் பேசிக் கொள்வோம். இங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை பற்றியும் அவரது ஆட்டத் திறன் குறித்தும், ஜடேஜா அடிக்கடி கேட்பார். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ரவீந்திர ஜடேஜா உந்துசக்தியாக உள்ளார்" என்று மகேந்திர சிங் சவுகான் தெரிவித்தார்.
இதையும் படிங்க :Cricket World Cup 2023: ‘சிறையில் இருந்தவாறே போட்டியை காண அனுமதி வேண்டும்’ - இம்ரான் கான் கோரிக்கை!