ஐதராபாத் :கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் இல்லாதா அணி என்றால் தான் அது இந்திய அணி மட்டும் தான். கிட்டத்தட்ட 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து தற்போது வரை உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை உலக அரங்கிற்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து வழங்கி கொண்டு தான் இருக்கிறது.
ஏரபள்ளி பிரசன்னா, பிசன் சிங் பேடி, அனில் கும்பளே, ஹர்பஜன் சிங் இப்படி அன்று முதல் இன்று வரை தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து வழங்கி கொண்டே தான் வருகிறது. அப்படி இந்த சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையில் நாம் பார்க்க இருப்பது இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடும் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். அவரை பற்றியது தான் இந்த சிறப்பு தொகுப்பு...
1986ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் ஆர்.அஷ்வின். இவரின் தந்தை பெயர் ரவிச்சந்திரன். இவர் கிளப் லெவல் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடியவர். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்ட அஸ்வின், தனது 9 வயதிலேயே கிரிக்கெட் பயணத்தை தொடங்கிவிட்டார்.
இவர் ஒரு பேட்ஸ்மேனாக தான் விளையாட ஆரம்பித்தார். பின்பு சில பல காரணங்களால் சுழற்பந்து வீச்சாளராக அவதாரம் எடுக்கும், சூழலுக்கு தள்ளப்பட்டார். கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார்.
அதன்பின், அபார பந்துவீச்சு திறனால் இந்திய அணியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வரும் அஸ்வின், அதிவேகமாக 50 விக்கெட், 100, 150, 200 விக்கெட்டுகள், 250, 300, 350 விக்கெட்டுகள், 400, 450 விக்கெட்டுகளை விழ்த்திய வீரர் என்ற பெருமையை தன்னகத்தே வைத்து உள்ளார்.