திருவனந்தபுரம் (கேரளா):13வது ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதன்படி, நாளை மறுநாள் (அக்.5) தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரோலியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கிய பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் 12 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதற்கு முன்னதாக 2003, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி, நெதர்லாந்து அணியுடன் மோதியது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் மற்றொரு பேட்டியில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 9வது பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக கவுகாத்தி மைதானத்தில் நடக்க இருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது பயிற்சி ஆட்டம் டாஸ் போடப்பட்ட நிலையில், மழையால் ரத்து செய்யப்பட்டது.