மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில் ராகுல் டிராவிட்டிடம் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்படுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாக ஆலோசகராக இருந்து வந்த கவுதம் கம்பீர், தற்போது அந்த பதவியில் இருந்து விலகி, தனது பழைய அணியான கொல்க்கதா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக திரும்புவதாக கூறப்பட்டு உள்ளது. இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீருக்கு பதில் ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைந்த பின்பு, இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்றார். அவரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றது. அதன்பின் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி போட்டி வரை சென்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல முடியாமல் போனது அனைவருக்கும் வருத்தமே.
மேலும், ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலத்தை நீடிப்பது குறித்து பிசிசிஐ ஆர்வம் காட்டுவதாகவும், ஆனால் டிராவிட் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், ராகுல் டிராவிட்டை ஆலோசகராக்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முனைப்பு காட்டுவது போல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:2வது வெற்றி பெறுமா இந்தியா? ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்!