மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்பந்த காலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரோடு நிறைவடைகிறது. ஆனால் ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என ரவி சாஸ்திரி அறிவித்தார்.
இந்திய அணி தற்போது, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வியடைந்து கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால், அணி கட்டமைப்பில் பெரும் மாற்றத்தையும் உத்வேகத்தையும் அளிக்கக்கூடிய ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முயற்சி எடுத்துவந்தது.
டிராவிட் நியமனம்
இந்திய அணியின் (சீனியர் ஆடவர் அணி) முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்துள்ளது. அவர், இம்மாதம் இந்தியாவில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து தொடரில் இருந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.
ராகுல் டிராவிட், கடந்த ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இளம் வீரர்களை கொண்ட அந்த அணி ஒருநாள் தொடரை வென்றாலும், டி20 தொடரை இழந்தது. இந்த தொடர், இந்திய இளம் வீரர்களுக்கான பரிசோதனையாக இருந்தாலும், ராகுல் டிராவிட்டுக்கும் பரிசோதனை தொடராகவே அமைந்தது.