Tamil Nadu Premier League 2022தொடரில் நேற்றைய (ஜூலை 06) டபுள் ஹெட்டரின் இரண்டாம் போட்டியில் இதுவரை இந்த சீஸனில் வெற்றியை ருசிக்காத நடப்பு சாம்பியன் (Chepauk Super Gillies) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் (Ruby Trichy Warriors) ரூபி திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி இந்த சீஸனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
பத்து நாள்கள் ஓய்வுக்குப்பின் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 தொடரில் மீண்டும் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஐபிஎல் சாம்பியன் அணியின் வீரரான சாய் கிஷோர் சேப்பாக் அணியுடன் இணைந்தார்.
முன்னதாக, டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ், ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆரம்பத்திலிருந்து அதிரடியாக விளையாடத் தொடங்கியது. சேப்பாக்கின் கேப்டன் கெளஷிக் காந்தி 19 ரன்கள் மற்றும் ஐபிஎல் நட்சத்திரம் ஜெகதீசன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் சசிதேவ் 117 ரன்களை குவித்தனர்.
ராதாகிருஷ்ணன் சிறப்பாக விளையாடி திருச்சிக்கு எதிராக தனது 3ஆவது அரைசதத்தைப் பதிவு செய்ததோடு சேப்பாக் அணிக்காக அதிகபட்சமாக 49 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக விளையாடிய சசிதேவ் 35 பந்துகளில் 65 ரன்களை சேர்த்தார். ரூபி திருச்சி வாரியர்ஸின் பெளலிங்கைப் பொறுத்தவரை அஜய் கிருஷ்ணா மற்றும் பொய்யாமொழி தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதில் முக்கியமாக, பொய்யாமொழி டிஎன்பிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த 3ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 203 ரன்களைக் குவித்தது. மேலும் இந்த சீஸனில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியுற்ற சேப்பாக் இந்தப் போட்டியில் வெற்றி பெற ரூபி திருச்சி வாரியர்ஸிற்கு 204 ரன்களை நிர்ணயித்தது.