பெங்களூரு :இந்திய அணிக்கு எதிராக உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா விளையாடுவதை பார்க்க விரும்புவதாக அவரது தாத்தா தெரிவித்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
இதில், நடப்பு சீசனில் அதிகம் கவனம் பெற்ற இளம் வீரராக அறியப்படுகிறார், நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா. இந்திய வம்சாவெளியை சேர்ந்தவரான ரச்சின் ரவீந்திரா தனது சிறு வயது முதலே பல்வேறு கிளப் போட்டிகளில் விளையாடி, தற்போது நியூசிலாந்து மெயின்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நியூசிலாந்து மண்ணில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தென்இந்திய உணவுகள் மீது அலாதி பிரியம் கொண்டவராம் ரச்சின் ரவீந்திரா. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவின் தாத்தா டி.ஏ. பாலகிருஷ்ணா ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர் கடந்த 1997ஆம் ஆண்டு வாழ்வாதாரம் தேடி நியூசிலாந்தில் குடியேறி உள்ளனர். நாளடைவில் இருவரும் நியூசிலாந்தில் நிரந்திர குடியுரிமை பெற்றனர். கடந்த 1999 ஆம் ஆண்டு ரச்சின் ரவீந்திரா பிறந்தார். கிரிக்கெட்டின் மீது தீராத மோகம் கொண்டு இருந்த ரச்சினின் பெற்றோர், சச்சின் மற்றும் ராகுல் டிராவிட்டின் நினைவாக தங்களது மகனுக்கு ரச்சின் என பெயர் வைத்தனர்.
சிறுவயது முதலே தனது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி விளையாடும் கிளப் போட்டிகளை பார்த்து கிரிக்கெட் ரச்சின் கற்றுக் கொண்டார். தன் தந்தை பல்வேறு மாகாணங்களுக்கு சென்று கிளப் கிரிக்கெட் விளையாடும் போது உடன் சென்று வந்த ரச்சின், ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டையே தனது வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொண்டார்.