கொல்கத்தா :உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் காயமடைந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா எஞ்சிய ஆட்டங்களில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்து கொண்டு இருக்கும் போது இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் பாண்ட்யாவிற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி அணியில் சேர்க்கபட்டனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா விளையாடமாட்டார் என பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
காயத்தில் இருந்து ஹர்திக் பாண்ட்யா மெல்ல மீண்டு வருவதாக பிசிசிஐ மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில், கணுக்கால் காயத்தில் இருந்து ஹர்த்திக் பாண்ட்யா இன்னும் குணமாகாத நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கணுக்கால் காயம் காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாமல் போன நிலையில், அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்திய நாளை (நவ. 5) தென் ஆப்பிரிக்க அணியையும், வரும் நவம்பர் 12ஆம் தேதி நெதர்லாந்து அணியையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் பிரசித் கிருஷ்ணா களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :ஈடன் கார்டன்ஸ் டிக்கெட் மோசடி.. 'புக் மை ஷோ' அதிகாரிகளிடன் விசாரணை!