பெங்களூரு :13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் 18வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடங்கினர்.
முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும், காலூன்றிய பின்னர் தடம் பதிக்கத் தொடங்கினர். பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட இருவரும் துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால், இந்த ஜோடியை அவ்வளவு எளிதில் பிரிக்க முடியவில்லை. பவர் பிளே முடிந்த பிறகும் இந்த ஜோடி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நையப் புடைத்தது.
அபாரமாக விளையாடிய இந்த ஜோடியை பிரிக்க பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசினர். ஒரு கட்டத்தில் அணியின் ஸ்கோர் 259 ரன்களாக இருந்த போது ஷாகீன் அப்ரிடி பந்து வீச்சில் மார்ஸ் ஆட்டமிழந்தார்.
அபாரமாக விளையாடிய மிட்செல் மார்ஸ் 121 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், சந்தித்த முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
7 ரன்கள் இருந்த போது பாகிஸ்தான் வீரர் உஸ்மா மிர்ரின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஒரு புறம் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் தொடக்க வீரர் டேவிட் வார்னர் நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடி 150 ரன்களை கடந்தார். 163 ரன்களை எட்டிய போது ஹரீஸ் ரவுஃப் பந்தை டேவிட் வார்னர் தூக்கி அடிக்க, அது மாற்று வீரர் ஷதாப் கான் கையில் தஞ்சமடைந்தது.