ஐதராபாத் :13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஐதராபாத் நகரில் நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணியின் இன்னிங்சை பக்கர் ஷாமனும், இமாம் உல் ஹக்கும் தொடங்கினர். நெதர்லந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொடக்க ஜோடி சற்று தடுமாறத் தொடங்கியது. தொடக்க வீரர் பக்கர் ஷாமன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒருபுறம் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும், சவுத் ஷாகீலும் தங்கள் பங்குக்கு தலா 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி மீண்டும் பரிதாபகர நிலைக்கு சென்றது. நெதர்லாந்து வீரர்களின் நேர்த்தியான சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவில் 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீடே 4 விக்கெட்டும், கொலின் அக்கர்மேன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நெதர்லாந்து அணி. தொடக்க ஆட்டக்காரரான மேக்ஸ் ஓ'டவுட் 5 ரன்களில் ஆட்டமிழந்து எமாற்றம் அளித்தார். அதன் பின் வந்த கொலின் அக்கர்மேன் 17 ரன்களுக்கு நடையை கட்டினார். தொடர்ந்து பேட்டிங் ஆல்-ரவுண்டர் பாஸ் டி லீடே விக்ரம்ஜித் சிங்குடன் ஜோடி சேர்ந்து அணிக்கு ரன்களை சேர்த்தார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். நெதர்லாந்து அணி 120 ரன்கள் எட்டிய நிலையில், இந்த ஜோடியானது பிரிந்தது. விக்ரம்ஜித் சிங் 52 ரன்களுடன் வெளியேறினார்.
அதன் பின் பாஸ் டி லீடே 67 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டை பரிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் நெதர்லாந்து அணி 41 ஓவர்கள் முடிவில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது.
இதையும் படிங்க :ஆசிய விளையாட்டில் இந்தியா பதக்க அறுவடை! எந்ததெந்த விளையாட்டுல என்னென்ன பதக்கம் தெரியுமா?