தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உமர் அக்மல் ஃபிட்டாக வேண்டும் - பாக்.பயிற்சியாளர் - உமர் அக்மல்

துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் உடற்தகுதியை மேம்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் வலியுறுத்தியுள்ளார்.

மிக்கி ஆர்தர்

By

Published : Mar 27, 2019, 2:54 PM IST

பாகிஸ்தான்-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால் 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியின் உமர் அக்மல் இடம்பிடித்துள்ளார். அவர் முதலிரண்டு போட்டிகளில் முறையே 48, 16 ரன்களை எடுத்தார். முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டு பின் ஃபிட்னஸ் தேர்வில் தோல்வியடைந்ததால் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் நேற்று துபாயில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

உமர் அக்மல் திரும்பியது குறித்து என்னால் எந்தக் குறையும் கூற முடியாது. அவர் இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். மேலும், இந்த தொடர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு என்பதை அவர் அறிந்திருப்பார். அவர் சிறப்பாக ஆடினாலும் அவர் உடற்தகுதியை இன்னும் மேம்படுத்த வேண்டும். உலகக்கோப்பை தொடருக்கான உடற்தகுதி தேர்வில் அவர் தேர்ச்சி அடைய வேண்டும்.

அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தவறும் போது எங்களை விமர்சனம் செய்வார்கள். ஆனால், இம்முறை புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்த காரணத்தினால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறோம். பாகிஸ்தான் அணியில் சர்வதேச தரத்திற்கு பல சிறந்த வீரர்கள் உள்ளனர். எங்கள் அணியை மேலும் சிறந்ததாக மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான்- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details