தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அலி, ரிஸ்வான் சதம் வீண்; ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்! - ஃபின்ச்

துபாய்: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

aus

By

Published : Mar 30, 2019, 7:10 PM IST

Updated : Mar 31, 2019, 6:56 AM IST

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றிய நிலையில், நான்காவது ஒருநாள் போட்டி துபாயில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் இமாத் வாசிம் ஆஸ்திரேலியாவை பேட்டிங் ஆட பணித்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியத் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபின்ச் - கவாஜா இணை களமிறங்கியது. கேப்டன் ஃபின்ச் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த மார்ஷ் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து தொடக்க வீரர் கவாஜா ஒருநாள் போட்டிகளில் 9-வது அரைசதத்தை எடுத்தார்.

பின்னர் பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்துவீச்சு காரணமாக ஹேண்ட்ஸ் கோம்ப் 7 ரன்னிலும், ஸ்டோனிஸ் 2 ரன்னிலும், கவாஜா 62 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 140 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

சதமடிக்கும் வாய்ப்பை தறவிட்ட மேக்ஸ்வெல்.

இதனையடுத்து வந்த மேக்ஸ்வெல் - அலெக்ஸ் கேரி இணை பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தது. அதிரடியாக ஆடிய இந்த இணை அரைசதம் கடந்தது. கேரி 55 ரன்களில் ஆட்டமிழக்க, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 98 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர் மசூத் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, பின்னர் வந்த சொஹைல் 25 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த ரிஸ்வான் - அலி இணை ஆஸ்திரேலிய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர்.

சதமடித்த அறிமுக வீரர் அலி.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அபித் அலி, முதல் போட்டியிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனைப் படைத்தார். அவர் 112 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களில் அக்மல் 7, சையத் அலி 7, கேப்டன் வாசிம் 1 என ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் ரிஸ்வான் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். பின்னர், 102 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காததால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் பாக். அணி தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கவுல்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகானாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

Last Updated : Mar 31, 2019, 6:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details