சென்னை:ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை தொடர் கடந்த 13ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் நடப்பு சாம்பியான இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதும் 22வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக் - இமாம் உல் அக் களம் இறங்கினர். 10 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் எடுத்த நிலையில், இந்த அணி 11வது ஓவரின் முதல் பந்தில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. இமாம் உல் அக் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின் வந்த கேப்டன் பாபர் அசாம், அப்துல்லா ஷபீக்வுடன் கைக்கோர்த்தார். இந்த கூட்டணி சிறிது நேரம் நிடிக்க, ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, ஷ்பீக்கை வீழ்த்தினார். அரைசதம் விளாசிய அவர் 58 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் 8, சவுத் ஷகீல் 25 ரன்கள் என அடுத்தடுத்து ஒருபக்கம் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் பாபர் அசாம் அவரது நிதான ஆட்டத்தின் மூலம் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தார். தொடக்க முதலே சிறப்பாக பந்து வீசி வந்த நூர் அகமது, 74 ரன்கள் எடுத்த பாபரை வீழ்த்தினார்.
தொடர்ந்து ஷதாப் கான் - இப்திகார் அகமது கூட்டணி அணிக்கு ரன்களை சேர்க்க, 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.