ஐதராபாத் :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முழுக்க முழுக்க இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்று தகுதி பெறும்.
ஐதராபத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டில் அந்த அணி சமபலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேநேரம் பாகிஸ்தானில் நேர்த்தியாக சுழற்பந்து வீசக் கூடிய நபர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. அதுவே அந்த அணிக்கு பலவீனமாக காணப்படுகிறது. அதேநேரம் நெதர்லாந்து அணி சழற்பந்து வீச்சில் செம்மையாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நெதர்லாந்து அணி சுழற்பந்து வீச்சில் 53 புள்ளி 43ஐ சராசரியாக கொண்டு உள்ளது.
நெதர்லாந்து சுழற்பந்து வீச்சாளர்களை மிடில் ஓவர்களில் கையாளுவது தான் பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிடில் ஓவர்களில் ஓரளவுக்கு பாகிஸ்தான் அணியால் ரன் குவிக்க முடியாமல் போனால், இறுதிக் கட்டத்தில் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
அதேநேரம் ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானம் பேட்டிங்கிற்கு சொர்கபுரியாக காணப்படுகிறது. இங்கு நடந்து பயிற்சி ஆட்டங்களில் 350 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு உள்ளது. அதனால் பேட்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கக் கூடிய இந்த மைதானத்தில் எளிதில் 350 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாமை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் 100 ஆட்டங்களுக்கும் குறைந்த எண்ணிக்கையில் விளையாடியவர்கள். நடப்பு உலக கோப்பை தொடரில் குறைந்த அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டு இருக்கும் ஒரே அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது. அதுவும் அந்த அணிக்கு பலவீனமாகத் தான் பார்க்கப்படுகிறது.