சென்னை :13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
நடப்பு சீசன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாதி கிணற்றை கடந்து உள்ள நிலையில், அடுத்த சுற்று வாய்ப்பில் அணிம்கள் நீடிக்க இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர பாகிஸ்தான் அணி கடுமையாக போராடி வருகிறது.
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (அக். 27) நடைபெறும் 26வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தென் ஆப்பிரிக்க நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வீறுநடை போட்டு வருகிறது. எதிர்கொண்ட ஐந்து ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் என நான்கு அணிகளை துவசம் செய்து புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
கடைசியாக 24ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் பலமாக காணப்படுகிறது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் நடப்பு சீசனில் இதுவரை 3 சதங்களை விளாசி முழு உடற்தகுதியில் உள்ளார்.