குயின்ஸ்டவுன்:இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்துபோட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றிது.
இந்த நிலையில் இன்று(பிப்.22) நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதனிடையே மழை பெய்ததால், போட்டியின் ஓவர்கள் 20ஆக குறைக்கப்பட்டது. அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பில் 191 ரன்களை குவித்தது.
இந்திய அணி பந்துவீச்சாளர் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 192 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். அந்த வகையில் ஸ்மிருதி மந்தனா 15 பந்துகளுக்கு 13 ரன்களுடனும், மிதாலி ராஜ் 28 பந்துகளுக்கு 30 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இதனிடையே ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா இருவரும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக, ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ரன் ரேட்டை உயர்த்தினார். இருப்பினும் 17.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதையும் படிங்க:IN vs WI T20: டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா