பெங்களூரு :பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை தொடர்ந்து நெதர்லாந்து வீரர் ரோலோப் வான் டெர் மெர்வே, இந்திய வீரர் விராட் கோலியிடம், அவர் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக பெற்றுக் கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், நேற்று (நவ. 13) நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதிக் கொண்டன. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 128 ரன்களும், கே.எல்.ராகுல் 102 ரன்களும் எடுத்தனர்.
ரோகித் சர்மா 61 ரன், சுப்மான் கில் 51 ரன் மற்றும் விராட் கோலி 51 ரன் என களமிறங்கிய அனைத்து வீரர்களும் அரைசதங்களுக்கு மேல் விளாசித் தள்ளினர். தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 47 புள்ளி 5 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து போட்டியின் முடிவில் நெதர்லாந்து வீரர் ரோலோப் வான் டெர் மெர்வே, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் அவரது கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுக் கொண்டார். இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், விராட் கோலி கையெழுத்திட்ட ஜெர்சியை அவரிடம் பெற்றுக் கொண்டார்.
அந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அதேநேரம், இந்த சம்பவதிற் பின் பாபர் அசாம் பல்வேறு விமர்சனங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெற்றார். இந்நிலையில், நெதர்லாந்து அணியின் ரோலோப் வான் டெர் மெர்வே, விராட் கோலியிடம் அவரது ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை பெற்றுக் கொண்டார். தென் ஆப்பிரிக்க அணிக்காக சில ஆண்டுகாலம் விளையாடிய ரோலோப் வான் டெர் மெர்வே, அதன் பின் நெதர்லாந்து அணிக்கு தேர்வாகி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :சிறந்த பீல்டருக்கான பதக்கம் வென்ற சூர்யகுமார் யாதவ்!