மும்பை:2024ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அண்மையில் ஐபிஎல் அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் டிரேட் முறையில் அணிகளுக்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி தன்னிடம் இருந்த கேமரூன் கிரீனை, பெங்களூரு அணியிடம் டிரேட் முறையில் விற்று அதை வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துக் கொண்ட ஹர்திக் பாண்ட்யாவை விலைக்கு வாங்கியது. ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியது முதலே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு யாருக்கு என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி 2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பு வகித்து வந்தார். அவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி, 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் கடந்த 2013ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது அந்தாண்டுக்கான ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்று தந்தவர் ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 2015, 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்படி கடந்த 13 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஸ்தான கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மா இந்த முறை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது, அவரது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 163 போட்டிகளில் 91 போட்டிளுக்கு ரோகித் சர்மா வெற்றியை தேடித் தந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி களம் காண உள்ளது. முன்னதாக வரும் ஜனவரி 19ஆம் தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தோனி Vs ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார்! ரூ.100 கோடி எங்க போச்சு? முழுத் தகவல்!