இந்தியாவில் 1983ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட மவுசு, அசாருதீன், சச்சின், கங்குலி, டிராவிட் என வரிசையாக உலகத்தர வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு அழைத்துவந்தது. இவர்கள் வந்த பிறகு ஒரு தலைமுறை கிரிக்கெட்டை நோக்கி வர தொடங்கியது.
அப்படி வந்தவர்களில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் என பலர் தங்களை உலகத்தர வீரர்களாக நிரூபித்தனர். இவர்களைப் போலவே கிரிக்கெட்டை நோக்கி ஒருவர் வந்தார். ஆனால், அவர் மேற்கூறியவர்களைவிட சற்று தனித்து நின்றார், தெரிந்தார்.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு இந்திய தீவுகளில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா நாக்-அவுட்டாகி வெளியேற, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 உலகக்கோப்பையை தட்டித்தூக்கியது இந்திய அணி. ஐந்து மாத இடைவெளியில் ஒரு தலைவன் உருவாகி நின்றான். ஆரம்பத்தில் தனது தலை முடியால் தனித்து தெரிந்த அவர், 2007 செப்டம்பர் 24க்கு பிறகு தனது தலைமை பண்பால் தனித்து தெரிந்தார், நின்றார். அவர் பெயர் தோனி.
2007,11,13... தவிர்த்து
தோனி என்றாலே டி20 உலகக்கோப்பை (2007), 50 ஓவர் உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் டிராஃபி (2013) என தோனி தொடர் வெற்றிகளை பெற்றார். ஆனால், அதே சாம்பியன்ஸ் டிராஃபி (2009), டி20 உலகக்கோப்பை (2014), ஒரு நாள் போட்டி உலகக்கோப்பை(2015) என தோல்விகளையும் சந்தித்து ரசிகர்களின் நம்பிக்கையை இழந்தார்.
அதேபோல், 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் பாதியில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது, சீனியர்கள் வீரர்களை வெளியேற்றி அணியின் ஒற்றை சீனியராக வலம் வந்தது என அவர் மீது வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களுக்கு அவரிடம் ஒரே பதில்தான் இருந்தது.