அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. லீக் மற்றும் அரைஇறுதி ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், கிளைமாக்ஸ் காட்சியான இறுதிப் போட்டி நேற்று (நவ. 19) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மேலும் உலக கோப்பையை 6வது முறையாக வென்று ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்தது. எதிர்பாராத தோல்வியை கண்டு மைதானத்தில் ரசிகர்கள் மனம் உருகியதை விட இந்திய அணி வீரர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகினர்.
அரைஇறுதி உள்பட தொடர்ந்து 10 ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது ஒட்டுமொத்த ரசிகர்களிடையே மனக் குமுறலை ஏற்படுத்தியது. இந்நிலையில், வீரர்கள் ஓய்வறையில் சோகத்தில் இருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.