துபாய்: ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான டிரேட் முறை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று (டிச.19) இத்தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 333 பேர் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே, பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் வாங்கியதே அதிகப்படியாக இருந்த நிலையில், தற்போது கொல்கத்தா அணியால் மிட்செல் ஸ்டார்க் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.
33 வயதான இவருக்கு தொடக்க விலையாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இவருக்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி சண்டையிட்டுக் கொண்ட நிலையில், இறுதியில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்கு வருகை தரும் இவர், முன்னதாக பெங்களூரு அணியில் விளையாடினார்.
2014 மற்றும் 2015 ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி உள்ள இவர், 27 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 20.38ஆக உள்ளது. அதேபோல், 2012ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். இதுவரை 58 போட்டிகளில் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:IPL Auction 2024: ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்! இவர் தான் பர்ஸ்ட்!