சென்னை:ஐபிஎல் ஏலம் விரைவில் வரவிருக்கும் நிலையில், அணியில் உள்ள வீரர்களை பரஸ்பரமாக மாற்றிக் கொள்வதில் தொடங்கி, மற்ற யுக்திகள் வகுக்கும் வரை அணிகள் தயாராகி விட்டன. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை அடைந்த சோகத்தை, கிரிக்கெட் ரசிகர்களிடையே போக்கும் விதமாக ஐபிஎல் அப்டேட்டுகள் வரத் தொடங்கி விட்டன.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. முன்னதாக அணிகளுக்கு இடையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரேட் முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில அணிகள் தங்களது வீரர்களை மாற்றிக் கொண்டு வருகின்றன.
இதற்கான காலக்கெடு இன்று மாலை 4 மணிக்குள் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அணைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் இன்று (நவ.26) சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அணியின் நட்சத்திர நாயகன் ஹர்திக் பாண்டியா, மீண்டும் மும்பை அணிக்கு 15 கோடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மும்பை அணியிடம் 50 லட்சம் மட்டுமே இருப்பு உள்ளது.