துபாய் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் முதல் மே வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தொடருக்கு முன்னதாக வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று (டிச. 19) நடைபெற்றது.
நட்சத்திர வீரர்களை ஏலம் எடுப்பதில் ஐபிஎல் அணி உரிமையாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. நடப்பு ஐபிஎல் மினி ஏலத்தின் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. அண்மையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக கைப்பற்றிய நிலையில், உலக கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு கடும் கிராக்கி காணப்பட்டது.
ஆஸ்திரேலிய வீரர்களை ஏலம் எடுப்பதில் பெரும்பாலான அணி உரிமையாளர்கள் மல்லுக்கட்டினர். அதனடிப்படையில் 2024 சீசனில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போய் மற்ற நாட்டு வீரர்களை மலைக்கச் வைத்து உள்ளனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விலைக்கு வாங்கியது.