ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னே மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 52.
இவர் தாய்லாந்து நாட்டில் உள்ள தீவில், தனது பங்களாவில் உயிரிழந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில், 1992ஆம் ஆண்டு ஷேன் வார்னே அறிமுகமானார். இவர், 145 போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகள், 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகள் என மொத்தம் 1001 சர்வேதச விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
நூற்றாண்டின் பந்து
இவர், 1993ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் கேட்டிங்கிற்கு வீசிய பந்து, 'நூற்றாண்டின் பந்து' (Ball of the Century) என அழைக்கப்படுகிறது. அந்த பந்து லெக்-திசையில் ஐந்து (அ) ஆறாம் ஸ்டெம்ப் லெந்தில் இருந்து ஆஃப்-திசையின் முதல் ஸ்டெம்பை தாக்கியது. பந்தின் சுழலைக் கண்டு அதிர்ச்சியடைந்த மைக் கேட்டிங், அதே அதிர்ச்சியில் பெவிலியன் வரை சென்றது இன்றும் கிரிக்கெட் ரசிகரின் மனதில் இருந்து விலகாது.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தலைமை தாங்கிய வார்னே, ஐபிஎல்லின் முதல் கோப்பையைக் கைப்பற்றிய பெருமையையும் பெற்றார்.
ஷேன் வார்னே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் மறைவிற்கு இன்று காலையில் இரங்கல் தெரிவித்து ட்வீட் போட்டிருந்த நிலையில், மாலையில் அவரது மறைவு செய்தி வந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.