சிட்னி:ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா கிரிக்கெட் அணி அரையிறுத்திக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஐசிசியின் அக்டோபர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சிறந்த கிரிக்கெட் வீரர் தேர்வு பரிந்துரையில் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ரசா, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் உள்ளிட்டோரும் இருந்தனர். மறுப்புறம் மகளிர் பிரிவில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தான் அணியின் நிதா தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரையில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மாவும் இருந்தனர்.
டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் அபாரமான ஆட்டங்கள் அதிகளவில் பேசப்பட்டுவருகின்றன. சில மாதங்களாகவே விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் அவர் மீண்டும் தன்னை சிறந்த வீரராக நிரூப்பித்துகாட்டியுள்ளார். அதன் வெளிப்பாடாகவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவரது பெயரை அறிவித்துள்ளது. இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் ஐசிசி தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த பாராட்டை மேலும் சிறப்பாக்கியுள்ளது. என்னுடைய அணியினர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு முழு ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதேபோல இந்த மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் பரிந்துரையில் இருந்த வீரர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.