மும்பை:5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்காக இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (ஜூன் 9) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இத்தொடரில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டார்.
மேலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர். போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், பயிற்சியின்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரில் இருந்து விலகுவதாக கேப்டன் கே.எல். ராகுல் இன்று (ஜுன் 8) அறிவித்தார்.
இந்நிலையில், அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் - பேட்டர், ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்திக் செயல்படுவார். தொடர்ந்து, இடதுகை சைனாமேன் சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவும் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். நேற்றைய (ஜூன் 7) பேட்டிங் பயிற்சியின்போது, வலது கையில் அடிபட்டதில் அவர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.