லண்டன்: டி20 கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.
அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, கனடா, பப்புவா நியூ கினியா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதன் பின் சூப்பர் 8, அரையிறுதி சுற்று மற்றும் இறுதிச் சுற்று நடக்கவுள்ளன. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 6 மாத காலமே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்குப் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கீரோன் பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கீரோன் பொல்லார்ட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2012ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பொல்லார்ட் 600க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டவர். அதேபோல் உலகம் முழுவதும் சென்று பல்வேறு லீக் போட்டிகளில் தற்போது பொல்லார்ட் விளையாடி வருகிறார். மேலும், சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. புகைப்படம் எடுத்துக் கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன்!