அகமதாபாத்: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் நேற்று(நவ. 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனைத் தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த சமயத்தில் களத்திற்கு வந்த லபுசேன் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக டிராவிஸ் ஹெட் உடனான பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்னஸ் லபுசேன் 58 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை வெற்றிக்கு பின் பேசிய மார்னஸ் லபுசேன் கூறியதாவது; "ஆரம்ப கட்டத்தில் 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் நான் இடம் பெறவில்லை. காயம் காரணமாக விலகிய ஆஷ்டன் அகருக்கு பதிலாகவே நான் அணியில் சேர்க்கப்பட்டேன். அதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
நேற்று இரவு (இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள்) 10 மணி வரை பிளேயிங் லெவன் அணியானது அறிவிக்கப்படவில்லை. நான் இறுதி போட்டியில் கலந்து கொள்வேனா என்பது எனக்கு தெரியாது. நான் சிந்தித்து கொண்டிருந்தேன், ஒருவேளை இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால், அணியின் வெற்றிக்கு எப்படி பங்களிப்பேன் என்று.
பேட்டிங்கில் களமிறங்குவதற்கு முன்பு நான் சற்று பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப சற்று டெஸ்ட் மேட்ச் போல் ஆட வேண்டி இருந்தது. ஹெட் போல் ஒரு வீரருடன் விளையாடும் போது, ரன் ரேட் பற்றிய அழுத்தம் இருக்காது. அதேபோல் 230, 240 போன்ற குறைவான இலக்கை சேஷ் செய்யும் போது ரன் ரேட் பற்றி கவலை கொள்ளாமல் நிதானமாக ஆட முடியும். சுலபமான பந்தை மட்டும் ரன்னுக்கு தள்ளி, மற்ற பந்துகளை தடுக்க மட்டுமே செய்தேன்.
இதன் மூலமே ஹெட் உடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடிந்தது. மேலும், இருவரும் பேசிக் கொள்ளும் போது, தங்களது வழக்கமான அட்டத்தையே வெளிப்படுத்த திட்டமிட்டோம். அதனாலேயே ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸாக மாற்ற முடிந்தது" என்றார்.
இதையும் படிங்க:உலகக் கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்த மிட்செல் மார்ஷ்! புகைப்படம் வைரல்!