தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 14, 2023, 2:24 PM IST

ETV Bharat / sports

KKR vs SRH: அதிரும் ஈடன் கார்டன்! அடங்காத கொல்கத்தா, அசத்துமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகிறது கொல்கத்தா. வலிமையான நைட் ரைடர்ஸ் அணியை சமாளிக்குமா சன்ரைசர்ஸ்? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Today IPL
இன்றைய ஐபிஎல்

ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று (ஏப்ரல் 14) மோதுகின்றன. நடப்பு சீசனில் பஞ்சாப் அணியுடன் தோல்வியடைந்த கொல்கத்தா அணி, பின்னர் சுதாரித்து விளையாடத் தொடங்கியது. அதன் பிரதிபலனாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தியது. இரு ஆட்டங்களிலும் 200 ரன்களுக்கு மேல் குவித்தது.

குறிப்பாக, அகமதாபாத்தில் நடைபெற்ற கடந்த ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மோதிய கொல்கத்தா அணி, த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங், கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விரட்டி, ரசிகர்களை பரவசப்படுத்தினார். இந்நிலையில், இன்று சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ரஹ்மனுல்லா குர்பாஸ், ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இதனால் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கணிசமான ஸ்கோரை குவிக்க வாய்ப்புள்ளது. எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசல் ரன் குவிக்க தடுமாறி வருகிறார். பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்த அவர், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். குஜராத் அணியுடனான ஆட்டத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். இதனால் அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஃபர்குசன் நம்பிக்கை: "முதல் ஆட்டத்தில் ரசல் சிறப்பாக விளையாடினார். ஆனால் அதன்பிறகு 2 ஆட்டங்களில் விரைவிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் இன்றைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடுவார்" என கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஃபர்குசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரை உமேஷ் யாதவ், சுனில் நரேன், ஃபர்குசன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த பவுலிங் கூட்டணி, சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஜேசன் ராய், லிட்டன் தாஸ் வருகை:காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கொல்கத்தா வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ரூ.2.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்றைய ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், வங்கதேச வீரர் லிட்டன் தாஸூம் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

சமாளிக்குமா சன்ரைசரஸ்?: ஹைதராபாத் அணியை பொறுத்தவரை, பஞ்சாப் அணியுடனான கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அந்த ஆட்டத்தில் ராகுல் திரிபாதி 74 ரன்கள் விளாசினார். ஹேரி ப்ரூக், மயங்க் அகர்வால், கேப்டன் மார்க்ரம், கிளாசென் ஆகியோர் பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடினால் தான், நைட் ரைடர்ஸ் அணிக்கு, சவால் தர முடியும். ஆல்ரவுண்டர்கள் அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணிக்கு, தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டியது கட்டாயம். மயங்க் மார்க்கண்டே, புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினால் தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.

தமிழ்நாடு வீரர் நடராஜன் நடப்பு சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்களை எடுத்த அவர், லக்னோ மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டங்களில் விக்கெட் எடுக்கவில்லை. பஞ்சாப் அணியுடனான கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய அவர் 40 ரன்களை விட்டுக் கொடுத்தார். குறைகளை சரி செய்து திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் இதுவரை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் 23 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 15 ஆட்டங்களிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில், கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. நடப்பு சீசன் புள்ளி பட்டியலின்படி கொல்கத்தா அணி 4ம் இடத்திலும், ஹைதராபாத் அணி 9வது இடத்திலும் உள்ளன.

போட்டி எங்கே?:கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் லீக் ஆட்டம், இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

கொல்கத்தா உத்தேச அணி: ஜேசன் ராய், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆந்த்ரே ரசல், சுனில் நரேன், ஷர்துல் தாகூர், டேவிட் வீஸ்/ ஃபர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

ஹைதராபாத் உத்தேச அணி:மயங்க் அகர்வால், ஹேரி ப்ரூக், ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சென், மயங்க் மார்க்கண்டே, புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக்/நடராஜன்.

ABOUT THE AUTHOR

...view details