தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

GT vs RR: கடந்த சீசனில் 'மாஸ்' காட்டிய அணிகள் - இன்று மீண்டும் நேருக்கு நேர்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மல்லுக்கட்டிய நிலையில், குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் நடப்பு சீசனில் இரு அணிகளும், முதல்முறையாக பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

IPL TODAY
இன்றைய ஐபிஎல்

By

Published : Apr 16, 2023, 2:11 PM IST

ஹைதராபாத்:16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 16) நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனில் குஜராத் அணி சென்னை, டெல்லி, பஞ்சாப் அணிகளை வீழ்த்திய நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியது. 6 புள்ளிகளைப் பெற்றுள்ள அந்த அணி, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. குஜராத் அணியில் விருத்திமான் சஹா, சுப்மன் கில் நல்ல தொடக்கம் அளிக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய சுப்மன் கில், நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

இதேபோல் தமிழ்நாடு வீரர்கள் சாய் சுதர்சன், விஜய் சங்கர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா என பேட்டிங் பட்டாளத்தை கொண்டுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள அந்த அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கும். பந்துவீச்சிலும் குஜராத் அணி பலமாகவே உள்ளது.

முகமது ஷமி, ரஷீத் கான், அல்சாரி ஜோசப், மொகித் சர்மா ஆகியோர் ஃபார்மில் உள்ளனர். இந்த கூட்டணியை சமாளிக்க ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். மேலும், இன்றைய ஆட்டம் குஜராத் அணியின் சொந்த மண்ணான அகமதாபாத்தில் நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

அதேநேரம் ராஜஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணி நடப்பு சீசனில் ஹைதராபாத், டெல்லி, சென்னை அணிகளை வீழ்த்தியுள்ள நிலையில், பஞ்சாப் அணியிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் எதிரணியை மிரட்டி வருகின்றனர். அதிரடி வீரர் பட்லர் 4 போட்டிகளில் விளையாடி 204 ரன்களை விளாசியிருக்கிறார். கேப்டன் சஞ்சு சாம்சன் சன்ரைசர்ஸ் அணியுடன் 55, பஞ்சாப் அணியுடன் 42 ரன்கள் விளாசிய நிலையில், டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட்டானார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் அவர் கூடுதல் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

ஹெட்மேயர், ஹோல்டர், தேவ்தத் படிக்கல் முழு பங்களிப்பை கொடுத்தால், குஜராத் அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எட்ட முடியும். பந்துவீச்சிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நல்ல ஃபார்மில் உள்ளது. தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல், சந்தீப் சர்மா சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

அசத்தும் சாஹல்:குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நடப்பு சீசனில் அசத்தி வருகிறார். இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 10 விக்கெட்களை வீழ்த்தி, அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்.

போல்ட் வருவாரா?: காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் விளையாடவில்லை. இதனால் இன்றைய போட்டியில் அவர் இடம்பெறுவாரா என உறுதியாக தெரியவில்லை. டாஸ் போடப்பட்ட பிறகே அதிகாரப்பூர்வமாக தெரியவரும். ஒருவேளை ஆடும் லெவனில் அவர் இடம்பெற்றால் குல்தீப் சென்னுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

கடந்த சீசனில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி, இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில், ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நிலையில் அதன்பிறகு மீண்டும் இரு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

இதுவரை மோதல்: அகமதாபாத் மற்றும் குஜராத் அணிகள் கடந்த சீசனில் 3 முறை மோதியுள்ளன. இதில் மூன்று முறையும் குஜராத் அணி வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆட்டம் எங்கே?:இரு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

குஜராத் உத்தேச அணி:விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, மோஹித் சர்மா, அல்சாரி ஜோசப்.

ராஜஸ்தான் உத்தேச அணி:ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல்/ரியான் பராக், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹெட்மேயர், துருவ் ஜூரெல், ஜேசன் ஹோல்டர், அஸ்வின், சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட்/ஆடம் ஸம்பா, குல்தீப் சென்.

ABOUT THE AUTHOR

...view details