ஹைதராபாத்:டாடா ஐபிஎல் 2023 தொடரின் 4ஆவது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 2) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. குறிப்பாக, ஹைதராபாத் அணியில் தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் இடம் பெற்றிருப்பது மாநில ரசிகர்கள் இடையே ஆர்வத்தை தூண்டியது.
முதல் இன்னிங்ஸ்:ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். குறிப்பாக, பட்லர் வெறும் 22 பந்துகளில் 10 பவுண்டரிகளை பறக்கவிட்டு 54 ரன்களை குவித்தார். இருப்பினும் 5.5 ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவருடன் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் 3ஆவதாக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் ரன்களை எடுக்க தொடங்கினர். 10 ஓவர்கள் முடிவிலேயே 122 ரன்களை குவித்தனர்.
ஜெய்ஸ்வால் 22 பந்துகளுக்கு 54 ரன்களை எடுத்திருந்த நிலையில் 12 ஓவரின் 3ஆவது பந்தில் விக்கெட்டானார். இதையடுத்து தேவ்தத் படிக்கல் களமிறங்கி 5 ஆவது பந்திலேயே ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்களில் டி நடராஜன் ஓவரில் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மியர் 16 பந்துகளுக்கு 22 ரன்களை எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை ராஜஸ்தான் அணி குவித்தது. மறுபுறம் பந்து வீச்சில் தமிழ்நாட்டு வீரர் டி. நடராஜன் மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். உம்ரான் மாலிக் 1 விக்கெட்டை எடுத்தார். அந்த வகையில் 204 ரன்கள் வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.
இரண்டாம் இன்னிங்ஸ்:ஹைதராபாத்தின் தொடக்க ஆட்டகாரரான பிஷேக் சர்மா 3 பந்துகளில் விக்கெட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன் பின் வந்த ராகுல் திரிபாதியும் 2 பந்துகளில் வெளியேறினார். முதல் ஓவரிலேயே 2 விக்கெட்கள் போனது. மயங்க் அகர்வால் நிதானமாக விளையாடியும் 23 பந்துகளுக்கு 27 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ் முறையே 13, 1, 8 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின் வந்த அடில் ரஷித்தும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இப்படி அடுத்தடுத்து ரன்களின்றி விக்கெட்டுகள் விழுந்தன. 16 ஓவர்கள் முடிவிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை மட்டுமே ஹைதராபாத் அணி எடுத்தது. 24 பந்துகளுக்கு 115 ரன்கள் தேவை என்ற நிலையில், களத்தில் கேப்டன் புவனேஷ்வர் குமாரும் அப்துல் சமத்தும் இருந்தனர். இவர்களும் விக்கெட்டை இழக்காமல் இருக்க நிதானமாக ஆடவே தோல்வி நெருங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது.
பந்து வீச்சில் ராஜஸ்தானின் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதேபோல டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். சொந்த மண்ணில் தோல்வி அடைந்ததால் ஹைதராபாத் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்:மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), உம்ரான் மாலிக், அடில் ரஷித், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), டி நடராஜன், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிப்.
இதையும் படிங்க:TATA IPL 2023: எந்த தேதியில், எந்த அணிக்கு மேட்ச்.. முழு அட்டவணை..