கவுகாத்தி: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆட்டத்தை தொடங்கினர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்ததுடன், அரை சதம் விளாசி அசத்தினர். 60 ரன்கள் எடுத்திருந்த போது முகேஷ்குமார் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 79 ரன்கள் குவித்த பட்லர், முகேஷ் குமார் பந்துவீச்சில் அவுட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். பராக் 7, ஹெட்மேயர் 39, துருவ் 8 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சை பொறுத்தவரை டெல்லி அணியில் முகேஷ் குமார் 2, குல்தீப் யாதவ், ரோவ்மன் பவல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.