லக்னோ: ஐபிஎல் 2023 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டூ பிளசிஸ் 44, விராட் கோலி 31 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்தது. அதேநேரம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நவீன் - உல் - ஹா 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷோனி மற்றும் அமித் மிஷ்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 127 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கிருஷ்ணப்பா கெளதம் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மற்ற அனைத்து வீரர்களும் பெங்களூரு அணியின் அபார பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 108 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே, ஆல் அவுட் செய்து அசத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளிகள் உடன் 5வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 10 புள்ளிகள் உடன் 3வது இடத்திலும் உள்ளன.