மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் முன்னரே தகுதிபெற்றுவிட்டன. நான்காவது இடத்திற்கு பெங்களூரு, டெல்லி அணிகள் இடையே போட்டாப்போட்டி நிலவியது. இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு (மே 21) நடைபெற்ற மும்பை - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி, பிளே ஆஃப் சுற்றின் நான்காவது அணியை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்தது.
டெல்லி அணி வென்றால் அதிக ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆப்பிற்கு செல்லும் என்றும், மும்பை வெற்றி பெற்றால் பெங்களூரு அணி நேரடியாக தகுதிபெற்றுவிடும் என்றும் கணிக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசியது. வெற்றிபெற்றே ஆக வேண்டிய இப்போட்டியில், டெல்லி அணி 160 ரன்களை மும்பைக்கு இலக்காக நிர்ணயித்தது. ரோவ்மேன் பாவெல் 43, ரிஷப் 39 ரன்களை எடுத்து ஆறுதல் அளித்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா 3, ரமன்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இஷான் - பிரீவிஸ்: இதையடுத்து, மும்பை சார்பில் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி களமிறங்க, ரோஹித் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மேலும், அவர் இந்த தொடரில் ஒரு அரைசதத்தைக் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் - பிரீவிஸ் பவுண்டரிகளை குவிக்க தொடங்கியது. 2ஆம் விக்கெட் பாட்னர்ஷிப் 51 ரன்களை எட்டியபோது, இஷான் கிஷன் 48 ரன்களில் குல்தீப்பிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆர்சிபியை காப்பாற்றிய டிம் டேவிட்:பிரீவிஸ் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து அதிரடி வீரர் டிம் டேவிட் களம் கண்டார். ஆட்டம் அப்போது யார் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்ற நிலையில் இருந்தது. ஆனால், டிம் டேவிட் வெறும் 11 பந்துகளில் 34 ரன்களை (4 சிக்ஸர், 2 பவுண்டரி) எடுத்து ஆட்டத்தை அப்படியே மும்பை பக்கம் திருப்பிவிட்டு, பெவிலியன் திரும்பினார். இறுதிக்கட்டத்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தாலும், கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரமன்தீப் சிங் ஆட்டத்தை முடித்துவைத்தார்.