ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று (மே 5), குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி, இப்போட்டியில் வெற்றிபெற்றால் முதலிடத்துக்கு முன்னேறும். எனினும், மும்பை அணியுடன் கடந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிரணியை மிரட்டுகிறார். மும்பைக்கு எதிரான கடந்த போட்டியில் 62 பந்துகளில் 124 ரன்களை விளாசி மிரள வைத்தார். அவர் கடந்த 4 ஆட்டங்களில் முறையே 44, 47, 77, 124 ரன்களை எடுத்து, நம்பிக்கைத் தருகிறார். ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மேயர் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் தடுமாறிய நிலையில், இப்போட்டியில் தவறை திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், அஸ்வின், சாஹல் நம்பிக்கை அளிக்கின்றனர். அத்துடன் சொந்த மண்ணில் விளையாடுவது ராஜஸ்தான் அணிக்குக் கூடுதல் பலம்.
குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த ஆட்டத்தில், டெல்லி அணியுடன் தோல்வியைத் தழுவியது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவைத் தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தனர். எனவே, இன்றைய ஆட்டத்தில் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்படும் என நம்பலாம். சாஹா, சுப்மன் கில், விஜய் சங்கர், டேவிட் மில்லர் நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பந்துவீச்சில் முகமது ஷமி, ரஷீத் கான் நம்பிக்கை அளிக்கின்றனர். அதேநேரம் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த அயர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டில், சொந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கிறார்.
ராஜஸ்தான் உத்தேச அணி: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர், துருவ் ஜூரல், ஜேசன் ஹோல்டர், அஸ்வின், சாஹல், சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், குல்தீப் யாதவ்/குல்தீப் சென்.