கொல்கத்தா : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் இன்னிங்சை குர்பசும், ஜேசன் ராயும் தொடங்கினர். குர்பஸ் 18 ரன்னும், ராய் 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மட்டும் நிலைத்து நின்று விளையாட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
நிலைத்து நின்று விளையாடிய வெங்கடேஷ் ஐயர் அரை சதம் கடந்தார். 57 ரன்கள் குவித்து வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை பந்துவீச்சாளர் சஹல் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு விரட்டிய ஜெய்ஸ்வி, அவ்வப்போது சிகசர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
மறுபுறம் ஜாஸ் பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். யாஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உறுதுணையாக கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாடினார். 13 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் யாஸ்வி ஜெய்ஸ்வால் 98 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். கேப்டன் சஞ்சு சாம்சன் 48 ரன்கள் குவித்தார். அடுத்த சுற்று வாய்ப்பில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து நீடிக்கிறது. அதேநேரம் கொல்கத்தா அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு சற்று மங்கி காணப்படுகிறது.
இதையும் படிங்க :மாநில கல்விக் கொள்கை குறித்த ஜவகர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; குழு தலைவர் நீதிபதி முருகேசன் விளக்கம்