இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்குகிறது. அதனைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய சீருடை வெளியிட்டு விழா, சவாய் மான்சிங் மைதானத்தில் 3டி ப்ரொஜெக்ஷன் முறையிலும், லைட்டிங் ஷோவாகவும் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல்.3) நடத்தப்பட்டது. இதனை நேரலையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இதில், அனைத்து வீரர்களும் புதிய சீருடையில் ப்ரொஜெக்ட் செய்யப்பட்டனர்.
மேலும், நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில், புதிய சீருடை மட்டுமின்றி புதிய கேப்டனின் தலைமையிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை நிர்வாகம் விடுவித்ததால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் கூறுகையில், "புதிய ஜெர்சி அறிமுக விழா நம்பமுடியாத ஒன்று. 2015ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் நான், பல வகையான மாற்றங்களைச் சீருடையில் பார்த்துள்ளேன். புதிய ஜெர்சி மிகவும் அழகாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் உயிரிழப்பு