தர்மசாலா:ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அணியின் தற்போதைய ரன் ரேட் -0.268 ஆகும்.
பிளே ஆஃப்-க்கு முன்னேற முடியுமா?:பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்புள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்திலும், அடுத்து வரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஆனால் அதுமட்டும் போதாது. பிற அணிகளின் முடிவுக்காகவும் காத்திருக்க வேண்டும். மேலும் பஞ்சாப் அணியின் ரன் ரேட் மைனஸில் உள்ளதால், இனி வரும் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியம்.
கடைசியாக கடந்த 13ம் தேதி டெல்லியுடன் மோதிய பஞ்சாப் அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். எனினும் அவரை தவிர பிற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. கேப்டன் தவான், லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா ரன் குவிப்பது அவசியம். பந்துவீச்சில் ஹர்ப்ரீத் பிரார், நேதன் எல்லீஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் ஃபார்மில் உள்ளனர். 12 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப், 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.