லக்னோ :16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
லக்னோ அணியின் இன்னிங்சை கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் கெயில் மேயர்ஸ் தொடங்கினர். தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அவ்வப்போது பந்தை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 29 ரன்கள் எடுத்த மேயர்ஸ், ஹர்தீப் பரார் பந்துவீச்சில் ஹர்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் லக்னோவின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. மறுபுறம் கேப்டன் ராகுல் துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அடித்து ஆடிய ராகுல் அரை சதம் விளாசி அணியின் ஸ்கோர் கணக்கை ராக்கெட் வேகத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தார்.
மறுபுறம் குர்னால் பாண்டியா 18 ரன், நிகோலஸ் பூரான் டக் அவுட், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினர். 74 ரன்கள் விளாசிய ராகுல் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனைக்கு ராகுல் சொந்தக்காரர் ஆனார்.
105 இன்னிங்சில் இந்த மைல்கல்லை கே.எல்.ராகுல் எட்டியுள்ளார். கிறிஸ் கெயில் (112 இன்னிங்ஸ்) வார்னர் (114 இன்னிங்ஸ்) விராட் கோலி (128 இன்னிங்ஸ்) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆயுஷ் பதோனி 5 ரன்னும், ரவி பிஸ்னாய் 3 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.