தர்மசாலா : ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள போட்டியில், நேற்று (மே 17) இரவு 7.30 மணிக்கு தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் வாரிய மைதானத்தில் நடைபெற்ற 64வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கில் களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா அரை சதம் கடந்து 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அது மட்டுமல்லாமல், வார்னர் 46 ரன்களில் ஆட்டம் இழந்தும். துவக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு நல்ல பங்களிப்பு கொடுத்த நிலையில் அடுத்து கள இறங்கிய வீரர்களும் துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ரோசூவ் அரை சதம் கடந்து அபாரமாக விளையாடி 82 ரன்கள் கடந்த நிலையில், ஆட்டத்தின் இறுதி வரையில் அவுட் ஆகாமலே இருந்தார். சால்ட் 26 ரன்களில் ஆட்டம் இழக்காமலும் இருந்தனர். இவ்வாறு அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடியதால், டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.
இந்த இன்னிங்ஸில் சாம் கரண் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கனவே, இந்த ஆட்டத்தில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது ஒரு இமாலய இலக்காகவே தெரிந்தது. இருப்பினும், நம்பிக்கை உடன் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் லியாம் லிவிங்ஸ்டன் அபாரமாக விளையாடி 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.