மும்பை :16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 31வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பஞ்சாப் வீரர்களை பேட்டிங்குக்கு களமிறங்குமாறு அழைத்தார்.
பஞ்சாப் அணியின் இன்னிங்சை மேத்யூ ஷார்ட், பிரத்சிம்ரான் ஆகியோர் தொடங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியை மும்பை வீரர் கேம்ரூன் கிரீன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் தொடக்க வீரர் மேத்யூ 11 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் துரித ஆட்டத்தில் ஈடுபட்டாலும் சீரான இடைவெளியில் பஞ்சாப் அணிக்கு விக்கெட் வீழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே தான் இருந்தது.
அதர்வா டெய்டு 29 ரன், லிவிங்ஸ்டோன் 10 ரன், ஹர்தீப் சிங் 41 ரன் என தங்கள் பங்குக்கு ரன் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே களமிறங்கிய கேப்டன் சாம் கரன் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். அதிரடியாக ஆடிய சாம் கரன் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி அணியின் ரன் விகிதத்தை கணிசமாக உயர்த்தினார்.
அரை சதம் தாண்டி விளையாடிக் கொண்டு இருந்த சாம் கரன் (55 ரன்), ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 25 ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.
உள்ளூர் மைதானத்தில் பஞ்சாப் அணியை 214 ரன்கள் எடுக்க வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் தவறு செய்து விட்டது என்பதை அந்த அணியின் வீரர்கள் பின்னர் உணர்ந்திருப்பர். மும்பை அணியில் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.