தர்மசாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 66வது லீக் ஆட்டத்தில் இன்று (மே 19) பஞ்சாப் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் 12 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், ராஜஸ்தான் அணி நல்ல ரன் ரேட்டைப் பெற்றுள்ளது. அத்துடன் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல பிற அணிகளின் முடிவுக்காக இரு அணிகளும் காத்திருக்க வேண்டியிருக்கும். இரு அணிகளுக்குமே வெற்றி முக்கியம் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும். எனினும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளைப் பொறுத்தமட்டில் ராஜஸ்தான் அணிக்கு 6 சதவீதமும், பஞ்சாப் அணிக்கு 2 சதவீதமும் மட்டுமே வாய்ப்புள்ளது.
நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 59 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் மீண்டு வருவது அவசியம். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், ரூட், படிக்கல், ஹெட்மேயர் பொறுப்புணர்ந்து விளையாடினால் தான் நல்ல ஸ்கோரை எட்ட முடியும். கடந்த போட்டியில் களம் இறங்காத வேகப்பந்து வீச்சாளர் போல்ட் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம். சாஹல், அஸ்வின், ஸம்பா கூட்டணி பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கிறது.
13 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அந்த அணியின் ரன் ரேட் -0.308 ஆகும். இதனால் இன்றைய போட்டியில் அந்த அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். டெல்லி அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.